Main Menu

அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு- வாலிபர் கைது

அமெரிக்காவின் சுதந்திர தினவிழா ஆண்டுதோறும் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் 246-வது சுதந்திர தின விழா இந்திய நேரப்படி நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணி வகுப்பு தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் பொது மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினார். அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி துடித்துக் கொண்டு ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுதந்திர தின அணி வகுப்பில் மர்ம நபர் துப்பாக்கியால் 25 சுற்றுகள் சுட்டதாகவும் அவருக்கு 18 முதல் 20 வயது வரைக்குள் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடினர். இந்த நிலையில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் ராபர்ட்-இ-க்ரைமோ. 22 வயதான அந்த வாலிபரை துப்பாக்கி சூடு நடந்த பகுதி அருகே மடக்கி பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஐலேண்ட் பார்க் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது துப்பாக்கி சூடு தொடர்பாக ராபர்ட் க்ரைமோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலியானவர்களில் ஒருவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர். குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார். வாலிபர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. துப்பாக்கி சூடு காட்சி வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையின் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். அதை கைவிட போவதில்லை. இந்த சுதந்திர தினத்தன்று அமெரிக்க சமூகத்திற்கு மீண்டும் வருத்தத்தை ஏற்படுத்திய புத்தியில்லாத துப்பாக்கி வன்முறையால் நானும், மனைவி ஜில்டை னும் அதிர்ச்சி அடைந்தோம் என்றார். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியானார்கள். இதையடுத்து துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்த ஜோபைடன், துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...