Main Menu

கோடிக் கணக்கான மக்களின் கண்ணீருடன் நிரந்தரமாக மண்ணில் புதைக்கப்பட்ட சுர்ஜித்!

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

80 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுர்ஜித்-சோகத்தின் உச்சியில் மக்கள்!

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

80 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித்தின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுர்ஜித்தின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர், சுர்ஜித்தின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டுசெல்லப்பட்ட சுர்ஜித்தின் சடலத்திற்கு உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை பொலிஸார், தீயணைப்பு துறையினர், சுமார் 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஒட்சிசன் கொடுக்கப்பட்டு வந்தது. ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் கடினமான பாறைகள் இருந்ததால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும் கண்காணிப்பதற்கு கமராவும் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு முயற்சியின்போதும் தோல்வியுற்று, குழந்தை சில அடிகள் கீழிறங்கியதால் 20 அடியில் சிக்கிய குழந்தை 88 அடிக்கும் கீழ் சென்றான்.

பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிய, இறுதி முயற்சியாக அதிநவீன ‘ரிக்’ இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் கடின பாறைகளால் தாமதமானது. இறுதியில் 80 மணி நேர மீட்புப்பணி பலனளிக்காமல் குழந்தை சுர்ஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தமிழகத்தை மாத்திரமன்றி உலகவாழ் தமிழர்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பகிரவும்...