புதுச்சேரியில் மும்மொழி கொள்கை: திமுக, அதிமுக எதிர்ப்பு
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பால் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 – 27 கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’-ன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு திமுக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
போதுமான தயாரிப்புகள் இன்றி, பாடம் எடுக்க புத்தகங்கள் கூட இன்றி, இவ்வளவு அவசரமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரி மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தையும் அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயலாகும்.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பன்முகத் தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். அண்ணா வகுத்துத் தந்த இரு மொழிக் கொள்கையே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மாணவர்களின் எதிர்காலத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் உண்மையான பாதுகாப்பு என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இரு மொழி கொள்கைக்கே ஆதரவு- அதிமுக அன்பழகன் உறுதி: புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சிபிஎஸ்இ பாடத்தில் மூன்று மொழிகள் கொண்டு வருவதில் உள்ள அறிவிப்பால் மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் தமிழக கல்வி வாரியம் பின்பற்றப்படுகிறது. தனியாக கல்வி வாரியம் இல்லை.
புதுச்சேரியைப் பொருத்தவரை பல தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்படுவது இல்லை. மத்திய அரசு சொன்னவுடன் செய்ய வேண்டியதில்லை. மாணவர்கள் பாதிக்காத வகையில் மும்மொழி கொள்கையை விஷயத்தை அமல்படுத்த அரசு சீரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மும்மொழி கொள்கை அவசியமற்ற ஒன்று. இரு மொழி கொள்கைக்கு தான் அதிமுக ஆதரவு உண்டு,” என்றார்.
