Main Menu

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் நாளை- வாக்குச்சாவடிகள் தயார்

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான பகிரங்கப் பிரசாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

நாளை (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்டப் பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தி.மு.க, அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர்.

கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாது கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றது.

அதன்படி, மு.க. ஸ்டாலின் (தி.மு.க, திருவாரூரில் தொடங்கி, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க), மயிலாப்பூரில் தொடங்கி, சொந்த ஊரான சேலத்தில் பிரசாரத்தை முடித்தார்.

விஜய் (த.வெ.க), பெரம்பூரில் தொடங்கி, சென்னை நந்தனத்தில் பிரம்மாண்ட கூட்டத்துடன் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சீமான் (நா.த.க), காரைக்குடியில் தனது இறுதிக்கட்டப் பேச்சை நிகழ்த்தினார்.

அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி), டி.டி.வி.தினகரன் (காரைக்குடி), பிரேமலதா (விருத்தாசலம்), திருமாவளவன் (திருக்கோவிலூர்) ஆகியோரும் தத்தமது இலக்குகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேர்தல் களம் : முக்கியப் புள்ளிவிபரங்கள்

வேட்பாளர்கள்: மொத்தம் 4,023 பேர் (ஆண்கள்: 3,579; பெண்கள்: 443; மூன்றாம் பாலினத்தவர்: 1).

வாக்காளர்கள்: மொத்தம் 5,73,43,291 பேர். இதில் பெண்களின் எண்ணிக்கை (2.93 கோடி) ஆண்களை விட (2.80 கோடி) அதிகமாக உள்ளது.

பாதுகாப்பு: 300 கம்பெனி துணை இராணுவத்தினர் மற்றும் 1.20 இலட்சம் தமிழக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறிமுதல்: பறக்கும் படையினரால் இதுவரை ₹1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 75,054 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), விவிபாட் (VVPAT) மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. பெல் (BEL) நிறுவனப் பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைச் சரிபார்த்து நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 3.60 இலட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடைபெறும்.

தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தின் 10-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி வாக்குப்பதிவை நேரடியாகக் கண்காணிக்க உள்ளார்.