Main Menu

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை

தொகுதி மறுவரையால் தமிழகத்தில் 39ல் இருந்து 59 ஆக எம்பிக்களின் எண்ணிக்கை உயரத்தான் போகிறது. குறைய வாய்ப்பே இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் என முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது; திமுகவை பொருத்தவரை பார்லிமென்டில் வெறும் பேச்சு மட்டும்தான் பேசினார்கள். ஆக்கபூர்வமாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எங்குமே பேசவில்லை. இன்றைக்கு முதல்வரிடம் கேட்கிறேன். இந்தியாவில் உத்தேச மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என்றால் தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை 39 இல் இருந்து 31 ஆக வந்துவிடும். 8 குறைந்து விடும். அதேபோல் கேரளா 20ல் இருந்து 12க்கு வந்துவிடும்.

மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.  தமிழக முதல்வர் பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.  பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்து சட்ட வல்லுனர்களுடன் இணைந்து பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பிரதமர் மோடி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு எப்படி கொண்டு வந்தோம் என பேசினார். 543 எம்பிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தினோம் என்றால் 816 ஆக எம்பிகளின் எண்ணிக்கை உயரும். இது யாருக்கும் எதிரானது இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்திருந்தோம் என்றால் தமிழக எம்பிகளின் எண்ணிக்கை 39ல் இருந்து 31 ஆக குறைந்திருக்கும். ஆனால் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறோம். எல்லா மாநிலங்களிலும் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் 50 சதவீதமாக உயர்த்துகிறோம் என்பது முதற்கட்டமாக தெரிய வந்திருக்கிறது. பார்லிமென்டில் அதிகாரப்பூர்வமாக நமது தலைவர்கள் சொல்வார்கள்.

அப்படி இருக்கும்போது தமிழகத்தில் எம்பிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கேரளாவில் எம்பிக்கள் இணைக்க இருபதில் இருந்து 30 வரை போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் செய்யாமல் எல்லோரையும் ஒரு நேர்கோட்டில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கும் போது எதற்காக பொய்யைப் பேசி மக்கள் மத்தியில் அச்சத்தை முதல்வர் ஸ்டாலின் உருவாக்குகிறார். 1960 ஐ தமிழகம் பார்க்கும் என்று சொல்கிறார்.

60-ல் திமுகவினர் யாரும் தீக்குளித்தார்களா? திமுகவின் குடும்பத்தில் யாரும் தீக்குளிக்கவில்லை அப்பாவி தொண்டர்களை தீக்குளிக்க வைத்து விட்டு வருஷத்திற்கு ஒரு முறை போய் மாலை போடுவதை கொள்கையாக திமுக ஏமாற்று வேலையாக செய்து கொண்டிருக்கிறது. உடனடியாக பிரதமர் மோடியை அச்சுறுத்தக்கூடிய விஷயத்தை முதல்வர் ஸ்டாலின் நிறுத்த வேண்டும். இது எல்லாம் முதல்வருக்கு தேவையில்லாத வேலை ஆக்கப்பூர்வமான ஆலோசனையை சொல்லுங்கள்.

அரசியல் கட்சிக்கு யோசனை சொல்வதற்கு தகுதி இருக்கிறது. பிரதமர் மோடியின் முயற்சி என்பது எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் நேரடியாக பெண்கள் அரசியலுக்கு வந்து சாதிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு தான் பார்லிமென்டில் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி இருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.