மேற்கு ஆசியா போர் எதிரொலி – இந்தியாவில் 25 இலட்சம் பேர் வறுமையை சந்திக்கும் அபாயம்
போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
புவிசார் அரசியல் பதற்றங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் சாமானிய மக்களின் பொருளாதார நிலையை நிலைகுலையச் செய்யும் என்பதை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி) அறிக்கை பிரதிபலித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடிக்கும் போர்ப்பதற்றமே சாமானிய மக்களின் பொருளாதார நிலையை சீர்குலைத்து இருக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தொடங்கியதில் இருந்தே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. அதாவது, போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் “மத்திய கிழக்கில் ராணுவ விரிவாக்கம்: ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் மனித மேம்பாட்டு பாதிப்புகள்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘இந்த மோதல் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் மனித மேம்பாட்டு அழுத்தங்களை விரிவுபடுத்துகிறது என்றும், எரிபொருள், சரக்கு போக்குவரத்து மற்றும் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிப்பதால் ஏற்படும் தாக்கம் குடும்பங்களின் வாங்கும் திறனைக் குறைத்து, உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்து, பொது வரவு செலவுத் திட்டங்களை நெருக்கடிக்குள்ளாக்கி, வாழ்வாதாரத்தை பலவீனப்படுத்துகிறது’ என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இந்த ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, உலகளவில் 88 லட்சம் மக்கள் வறுமையில் விழும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கு 299 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பை ஏற்படுத்த இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்ப்பதற்றம் மற்றும் ராணுவ மோதல்கள் காரணமாக இந்தியாவில் 25 லட்சம் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது ஏற்கனவே இந்தியாவில் வறுமைக்கு தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது 25 லட்சமாக எகிறும் நிலையில் உள்ளது. இந்தியாவின் வறுமை விகிதம் 23.9 சதவீதத்தில் இருந்து 24.2 சதவீதமாக உயரக்கூடும் எனவும், போர் நெருக்கடிக்கு பின் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 35.4 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஏன் இந்த பாதிப்பு? என்று பார்த்தால், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதில் 40 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் 90 சதவீதம் எல்.பி.ஜி. மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே வருகிறது.
வளைகுடா நாடுகளில் அதிகம் வசிக்கும் இந்தியர்களுக்கு போரினால் வருமானம் குறைவதால், குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 14 சதவீதம் மற்றும் இறக்குமதியில் 20 சதவீதம் மேற்கு ஆசிய சந்தைகளை சார்ந்துள்ளது. இவையெல்லாம் பாதிக்கப்படும்போது, அதை சார்ந்திருக்கும் மக்களையும் இந்த பாதிப்பு ஆட்கொள்கிறது. அதாவது முறைசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் போர், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியக் குடும்பங்களின் அடுப்பாங்கரை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
