Main Menu

காங்கிரஸுடன் மாயாவதி இணைவு!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுமென தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா, மாயாவதியுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இந்த பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் தொகுதிப் பங்கீடு முடிந்தால் மட்டுமே கூட்டணி உறுதியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஹரியாணாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.அரசின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுகிறது.

அதனைத் தொடர்ந்து அங்கு, ஒக்டோபர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் மற்றும் ஜனநாயக ஜனதா  கட்சி ஆகியன கடந்த மாதம் அறிவித்து இருந்தன.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 40 தொகுதிகளை ஒதுக்க துஷ்யந்த் முடிவு செய்தார். ஆனால், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டது.

அதன்பின்னர் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையிலேயே காங்கிரஸும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...