Main Menu

சென்னையின் 3 தொகுதிகளிலும் 56.10 சதவீதமே ஓட்டுப்பதிவு முந்தைய தேர்தலைவிட 4 சதவீதம் சரிவு

சென்னையின் மூன்று லோக்சபா தொகுதிகளில் 68.14 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக, மாநில தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், 56.10 சதவீத ஓட்டுகளே பதிவானதாக திருத்தப்பட்டு நேற்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. முந்தைய தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளது. மாவட்ட அளவிலான ஓட்டுப்பதிவில் தொடர்ந்து பின்தங்கிய புதிய சாதனையையும் தலைநகர் சென்னை பிடித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க., – அ.தி.மு.க., – பா.ஜ., – நா.த.க., உட்பட 107 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

இத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் காலை 7:00 மணி துவங்கி, மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. சில இடங்களில் ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, நேரம் கடந்தும் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கு சென்னையில் 48.69 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி உடையவர்களாக, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இவர்களில் 40 சதவீதம் பேரின் ஓட்டுகள் பதிவாகாததால், சென்னையின் ஓட்டுப்பதிவு 56.10 சதவீதமாக பதிவாகி உள்ளது.

தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து, தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டாலும், ஓட்டுப்பதிவு நாள் வரை, பல இடங்களில் குளறுபடி, குழப்பமே நிலவியது.

பெரும்பாக்கத்தில் ஒரே இடத்தில் 32,000 பேருக்கு ஓட்டுகள் இல்லாதது, வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கானோரின் பெயர் விடுபட்டது, ‘பூத் சிலிப்’ வழங்குவது உள்ளிட்ட பணிகளில், தேர்தல் அலுவலர்கள் அலட்சியமாகவே இருந்தனர்.

தவிர, வழக்கமாக செயல்படும் ஓட்டுச்சாவடிகளை இடமாற்றியது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற காரணங்களாலும், ஓட்டளிக்க ஆர்வமாக வந்த பலரும், ஓட்டளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதனால், பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தவிர, பெரும்பாலான இடங்களில் சில மணி நேரத்திற்கு ஓட்டளிக்க யாரும் வராத சூழலும் நிலவியது. மதியத்திற்கு மேல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பானது.

இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும், மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும் முரண்பாடாக இருந்தது. இதனால், நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டனர்.

அதேநேரம், மாநில தேர்தல் கமிஷன் வாயிலாக வெளியிடப்பட்ட பட்டியலில் சென்னை மாவட்டத்தில், 68.14 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், சென்னை மாவட்டத்தில் பதிவான முழுமையான ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அதில், வடசென்னையில் 60.13 சதவீதம், தென்சென்னையில் 54.27 சதவீதம், மத்திய சென்னையில் 53.91 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தில் இந்த தேர்தலில் 56.10 சதவீத ஓட்டுகளே பதிவாகியுள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலைவிட 4 சதவீத ஓட்டுகள் குறைந்து பதிவாகி, மாநில அளவில், ஓட்டுப்பதிவில் சென்னை தொடர்ந்து பின்தங்கியுள்ளது என்ற சாதனையையும் பிடித்துள்ளது.

சட்டசபை தொகுதி வாரியாக, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில் 56.46 சதவீதம், அமைச்சர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் 54.03 சதவீதம், அமைச்சர் சேகர்பாபு தொகுதியான துறைமுகத்தில் 53.18 சதவீதம், அமைச்சர் சுப்பிரமணியன் தொகுதியான சைதாப்பேட்டையில் 53.25 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 66.75 சதவீத ஓட்டுப்பதிவும், குறைந்தபட்சமாக ஆயிரம்விளக்கு சட்டசபை தொகுதியில் 52.04 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

இந்நிலையில், ஓட்டுப்பதிவான இயந்திரங்கள், அண்ணா பல்கலை, ராணிமேரி கல்லுாரி, லயோலா கல்லுாரி வளாகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ‘சீல்’ வைக்கும் நடைமுறையை, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

சென்னை மாவட்டத்தில் அலுவலர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என, 40,000க்கும் மேற்பட்டோர், இரவு, பகல் பாராமல் பணியாற்றினர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மூன்று இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில், அவற்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், 188 கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 1,095 போலீசார், மூன்று சுழற்சி முறைகளில், 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். இந்த மூன்று வளாகங்களும், ஜூன் 6ம் தேதி வரை, தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

சென்னை மாவட்டத்தில் 56.10 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை விட, 4 சதவீதம் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வுகளால், இந்த அளவுக்கு ஓட்டுபதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

60.21 சதவீதம்

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதியில், 60.21 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் 2.06 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளது. மொத்த வாக்காளர்களில், 9 லட்சத்து 46 ஆயிரத்து 94 பேர் இந்த தேர்தலில் ஓட்டளிக்கவில்லை.சட்டசபை தொகுதி வாரியாக, மதுரவாயலில் 57.83 சதவீதம், அம்பத்துாரில் 60.37, ஆலந்துாரில் 57.81, ஸ்ரீபெரும்புதுாரில் 70.54, பல்லாவரத்தில் 57.09, தாம்பரத்தில் 58.34, சதவீத ஓட்டு பதிவாகி உள்ளன.

பகிரவும்...