Main Menu

கட்சி பேதங்களைக் கடந்து செயலாற்றக் கூடிய ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்: ஞானசார தேரர்

இலங்கையில் அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கட்சி பேதங்களைக் கடந்து அர்ப்பணிப்பு மிக்க ஒருவரையே நாட்டின் தலைவராக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். கலகொட அத்தேஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய, தேரர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதை நாம் தற்போது காணக்கூடியதாக உள்ளது.

இவர்களிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம்.  நாட்டின் தற்போதைய நிலைமையில், கட்சியொன்றுக்கான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதைவிட, இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தேசிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியதுதான் அவசியமாக உள்ளது.

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை நாம் மீண்டும் மேற்கொள்ளக்கூடாது.  அப்பாவிடமிருந்து மகனுக்கும், மகனிடமிருந்து பேரனுக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில், நாம் செயற்படக்கூடாது.

குடும்ப ஆட்சிக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அர்ப்பணிப்புள்ள தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில்தான் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

பொதுபல சேனா என்ற வகையில், எமக்கு என்று தனியான வேலைத்திட்டமொன்று இருக்கிறது.

நாம் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவர்கள் அல்ல. இந்த நாட்டுக்கான சிறந்த தலைவரை தெரிவு செய்துவிட்டு, நாம் அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையைத் தான் முன்வைப்போம்.

அதாவது, அவர் கட்சி மற்றும் சின்னத்தை கைவிட்ட வேண்டும். அவ்வாறு செய்யும் ஒருவரை நாம் இந்நாட்டின் தலைவராக்குவோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...