Main Menu

நுவரெலியா வசந்த காலத்தில் சுற்றுலா பயணிகளை அசௌகரியப் படுத்தும் யாசகர்கள் – எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி  தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் செய்பவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தினமும்  பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் , ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயற்சி செய்வதாகவும்  குற்றஞ்சாட்டு தொடர்ந்து காணப்படுகின்றது.

இவர் ஒரு குழுவாகவே வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து  குறித்த பெண்கள்  கைக்குழந்தையுடன் அமர்ந்து இருக்கின்றனர் , அதிகமானவர்கள் கர்ப்பிணிப் பெண்களாகவும் , பாலூட்டும் தாய்மார்களாகவும் உள்ளனர் இதில்  சிறுமிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஊதுபத்தி விற்பனை செய்யும் போது ஊதுபத்தியினை பார்த்துவிட்டு  வாங்குவதற்கு தவரும் பட்சத்தில் பொது மக்களையும் சுற்றுலா பயணிகளையும் தகாத வார்த்தைகளால்  அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் உடலில் உரிமை இன்றி  தொடுவதும்  அவர்களையும்  அவதூறாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த சகலருக்கும் தெரிந்திருந்தும், தெரியப்படுத்தியிருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளினால் எதிர் வரும் காலங்களில் நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது ,  இந்நிலையில் தற்போது ஏப்ரல் வசந்த காலம் மற்றும்  சித்திரை புத்தாண்டு காலம் என்பதால் இவர்களின் தொல்லை மேலும் தீவிரமடைந்து காணப்படுகின்றது.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இனி வரும் காலங்களில் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிரவும்...