Main Menu

அமெரிக்க – வட கொரிய தலைவர்களுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பினை நடத்துவது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உள்ள விருப்பம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் ஒருபோதும் குறையாது.

அவர்களிடையேயான கடிதப் போக்குவரத்து இன்னும் தொடர்ந்து வருவதே அதற்குச் சான்றாகும். என்னைப் பொருத்தவரை, இரு தலைவர்களிடையே நடைபெற்ற கடைசி சந்திப்பு தோல்வியடைந்ததாகக் கூற முடியாது.

இரு தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை முன்வைக்கவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும்தான் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும். ஹனோ பேச்சுவார்த்தையில் அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டது.

கொரியாவை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் வெற்றி தோல்வியை ஒன்றிரண்டு சந்திப்புகள் முடிவு செய்துவிடாது. எனவே, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா, வட கொரியா ஆகிய இரு நாடுகளுமே உணர்ந்துள்ளன.

இதன் காரணமாக, டிரம்ப் – கிம் இடையிலான 3-ஆவது சந்திப்பை நடத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் இரகசியமாக ஆலோசித்து வருகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...