Main Menu

இலங்கை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை!

இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய மீனவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதியை இந்திய மீனவர்கள் சந்தித்துப் பேச மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து விசைப்படகு மீனவ அமைப்புகள் இன்று இராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக மீனவர்கள் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதை கண்டித்தும், இந்திய பிரதமர் மீனவர் பிரச்சினை குறித்து பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இலங்கையில் மீட்கப்படாத படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கவும் நல்ல நிலையிலுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை தொடங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியை தமிழக மீனவர்கள் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து மீனவர் சங்க அமைப்புகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 850இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் இடப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்களும் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலை இழப்பதோடு நாளொன்றுக்கு ரூ.4 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...