Main Menu

இன்னமும் உண்மையான விடுதலை கிடைக்கவில்லை: சுதந்திர தினத்திலும் லெபனானில் போராட்டம்!

லெபனானில் சுதந்திர தினத்திலும், தலைநகர் பெய்ரூட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

நாட்டின் 77ஆவது சுந்திர தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று, அரசியல் பிளவு, பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஒகஸ்ட் மாதம் பெய்ரூட்டின் துறைமுக குண்டுவெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்கள் அந்நாட்டு மக்களை உலுக்கியதால், சுதந்திர தினத்திற்கான பல தேசிய கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.

இருந்தபோதிலும், பல சுதந்திர அரசியல்வாதிகளின் கல்லறைகளில் மாலை அணிவிக்கப்பட்டன, அதே நேரத்தில் இராணுவத் தளபதி தலைமை ஜெனரல் ஜோசப் அவுன் லெபனான் இராணுவ தியாகிகளின் நினைவு சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்தநிலையில், நாட்டின் அரசியல் தலைமையை நிராகரிக்கும் மக்கள், லெபனானின் பொருளாதார, நிதிச் சிக்கல்களுக்கு அரசியல் தலைவர்களைக் குற்றம் சாட்டி நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இன்னமும் உண்மையான விடுதலை நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

ஏறத்தாழ 68.5 இலட்சம் மக்கள் வசித்துவரும் லெபனானில், 1975-1990 உள்நாட்டுப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க லெபனான் தலைவர்கள் மீது பிரான்ஸ் அழுத்தம் கொடுத்த போதிலும் லெபனான் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன.

ஒகஸ்ட் 4ஆம் திகதி பெய்ரூட் துறைமுக குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஹசன் டயப் தலைமையிலான கடந்த அரசாங்கம் இராஜினாமா செய்த பின்னர், பெர்லினின் முன்னாள் தூதராக இருந்த ஆடிப், ஒகஸ்ட் 31ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்றார்.

அவருக்கு பணிக்கு அமர்த்தப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, பாகுபாடற்ற அமைச்சரவையை வரிசைப்படுத்துவதற்கான முயற்சிகள், சிக்கலில் முடிந்த நிலையில், தனது பதவியை இராஜினாமா செய்தார். தற்போது புதிய பிரதமராக சாட் ஹரிரி பதவி வகிக்கிறார்.

இதனிடையே 2020ஆம் ஆண்டின் இறுதியில் லெபனானில் அரைவாசி மக்கள் உணவுப் பஞ்சத்தைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்கு ஆசிய பொருளாதார மற்றும் சமூக ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகிரவும்...