Main Menu

டிக்ரே மாகாண அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்: எத்தியோப்பிய அரசாங்கம் திட்டவட்டம்!

தங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாண அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று எத்தியோப்பிய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அபை அகமதின் உதவியாளர் மமோ மிஹ்ரேட்டு கூறுகையில், ‘குற்றமிழைப்பவர்களுடன் சமாதானம் பேசும் வழக்கம் எங்களுக்கு இல்லை. அவர்களை சட்டத்தின் முன்தான் கொண்டு வந்து நிறுத்துவோமே ஒழிய, பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர மாட்டோம்’ என கூறினார்.

எத்தியோப்பிய ஆளும் கட்சிக் கூட்டணியில் மிக முக்கியப் பங்கு வகித்து வந்த டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எஃப்), நாட்டின் பிரதமராக அபை அகமது கடந்த 2018ஆம் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது.

அபை அகமது தடை விதித்திருந்த தடையையும் மீறி, மாகாணத் தேர்தலை கடந்த செப்டம்பர் மாதம் டிக்ரே அரசாங்கம் நடத்தியது. இது, மத்திய அரசாங்கத்துக்கும் டிக்ரே மாகாண அரசாங்கத்துக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டிக்ரே மாகாணத்திலுள்ள இராணுவ நிலையொன்றின் மீது டிபிஎல்எஃப் படையினர் தாக்குதல் நடத்தியதாக கடந்த 4ஆம் திகதி குற்றம் சாட்டிய அபை அகமது, மாகாணப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும்படி இராணுவத்துக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...