Main Menu

ஆழிப் பேரலையில் உயிர் நீத்தாரை நினைவு கொள்ளும் நாள் இன்று

நிலையற்ற மனித வாழ்க்கையில் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதில் ஒரு சில நிகழ்வுகள் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இடம் பிடித்து இருக்கும். அப்படி மனித மனங்களை விட்டு நீங்காமல் இடம் பிடித்த நிகழ்வுகளில் ஒன்றுதான் சுனாமி. ஆம், கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே கடலுக்குள் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உருவானது தான் சுனாமி எனும் ஆழிப்பேரலை. ஆக்ரோஷத்துடன் வானோக்கி பல அடி உயரத்துக்கு பொங்கி எழுந்த ராட்சத அலையானது இந்தியாவின் வங்கக் கடல் ஓரம் கடலோர கிராமங்களை காவு கொண்டது.
இதன் விளைவு, அமைதியாக இருந்த கடல் தேவதை சுனாமி வடிவில் கோர தாண்டவம் ஆடுவாள் என்பதை சற்றும் எதிர்பாராது அதிகாலையில் எழுந்து மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள், கடற்கரையோரம் ஓடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்கள், வீட்டில் அன்றாட வேலைகளை கவனித்து கொண்டிருந்த பெண்கள், முதுமை காரணமாக படுக்கையில் கிடந்த முதியோர்கள் என சுனாமியின் கோரப்பசிக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் 610 பேர் பலியானார்கள். நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சுதாரித்துக்கொண்டவர்கள் ஆழிப்பேரலையின் நுனிப்பிடியில் இருந்து தப்பி உயிர் பிழைத்தனர்.
கடற்கரை எங்கு நோக்கிலும் பிணக் குவியல்கள். பாசக்கிளிகளாக வளர்த்து வந்த பிள்ளைகள் பிணமாக கிடப்பதை பார்த்து பெற்றோரும், தங்களை பாசத்துடன் வளர்த்து வந்த பெற்றோர் பிணமாக கிடப்பதை பார்த்து பிள்ளைகளும், உறவினர்களும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இறந்தவர்களுக்கு தனித்தனியாக இறுதி சடங்கு செய்ய முடியாத நிலையில் ஆங்காங்கே குழிதோண்டி உடல்கள் புதைக்கப்பட்டன.
அது மட்டுமல்ல ஆழிப்பேரலையின் தாக்குதலில் வீடுகளை இழந்தவர்கள், படகுகள், மீன்பிடிவலைகள் உள்ளிட்ட உடமைகளை இழந்தவர்கள் நிராயுதபாணியாக தவித்தனர். ஆதரவற்று நிற்கதியாய் நின்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு கரம் நீட்டின. மேலும் பிற மாநில அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் உதவி கரம் நீட்டி மனித நேயம் இன்னும் மாண்டுவிடவில்லை என்பதை உணர்த்தியதை யாரும் மறக்க முடியாது. இதன் மூலம் மீளா துயரில் இருந்த கடலோர கிராம மக்களின் வாழ்க்கை படிப்படியாக பிரகாசிக்க தொடங்கியது.
என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு பலியான தங்களின் பெற்றோர்களை நினைவு கூரும் வகையில் அவர்களின் பிள்ளைகளும், பிள்ளைகளை நினைவு கூரும் வகையில் அவர்களின் பெற்றோரும், நண்பர்களும் சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அப்போது இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலைகள் அணிவித்தும், உணவு பதார்த்தங்களை படைத்தும் அஞ்சலி செலுத்துவார்கள்.
அந்த வகையில் இன்று(செவ்வாய்க் கிழமை) சுனாமி 13-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது தவிர பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள். மாவட்டத்தின் தலைநகரான கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படும் இந்த நாளில் ஆழிப்பேரலையில் உயிர் நீத்தாரை நினைவு கொள்வோமாக.
பகிரவும்...