Main Menu

அமெரிக்காவில் ஒருவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஒவ்வாமை?

அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில், ஃபைசர் கொரோனா தடுப்பூசியால் தீவிர அலர்ஜி ஏற்பட்ட நபர், இதற்கு முன்னர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர் அல்ல என சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தீவிர ஓவ்வாமை ஏற்பட்டவுடன் அதற்குரிய மருந்து கொடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பிரித்தானியாவில் இதேபோல இருவருக்கு தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட உணவு அல்லது மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் அதன் மீதான நம்பிக்கையின்மையால், அமெரிக்க மக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என சில ஆய்வு முடிவுகள் வெளியானதன் பின்னணியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதனிடையே அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும் அந்நாட்டு துணை துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் நாளை (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் முன்னிலையில் பொதுவெளியில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

பகிரவும்...