மறக்கப்பட்ட விவகாரம் – பி.மாணிக்கவாசகம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து
வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ், பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டார்கள். விடுதலைப்புpகளின்
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை புரிந்தார்கள் அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும், அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களும்கூட படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை
மேற்கொண்ட அரசாங்கங்கள்,அந்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தன. அதனால், அந்தப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்பட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டார்களே தவிர, அவர்கள்
அரசியல் கைதிகளாக நோக்கப்படவில்லை.
முன்னைய அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோது, அரசுக்கு பல முன்னாள் போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 11
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தைப் பயன்படுத்தி புனர்வாழ்வுப் பயிற்சியளித்த அரசு அவர்களை விடுதலை செய்து, சமூக வாழ்க்கையில் இணையச் செய்திருந்தது.
அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி நேரடியாகப் போராடிய இந்த இளைஞர் யுவதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ததாக அரச தரப்பினர் பெருமையடித்துக் கொள்கின்றார்கள்.
ஆனால், படையினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு, அரசு பொது மன்னிப்பு வழங்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 11 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தமை அரசாங்கத்தின் மனிதாபிமானம் அல்லது நல்லிணக்கத்தின் அடையாளம் என்றால்,
பல வருடங்களாக உரிய விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் வதைபடுகின்ற அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சிபுரியும் அரசாங்கத்தினால் ஏன் அந்த மனிதாபிமானத்தை அல்லது நல்லிணக்கத்தைக் காட்ட முடியவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிவாகை சூடியபோதிலும், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்ததாகக் குற்றம் சுமத்தி, முன்னைய அரசாங்கத்திற்கு
எதிராக கத்தியின்றி சத்தமின்றி ஒரு ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து வெற்றி பெற்ற இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னரும், பதவிக்கு வந்த பின்னரும் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாக பல தடவைகளில் உறுதியளி;த்திருந்த
போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநத உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று சிறைச்சாலைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளும் அவர்களுடைய உறவினர்களும் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமைச் செய்ற்பாட்டாளர்களும்கூட
குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் அவர்கள் விடுத்த கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாறியிருக்கின்றது.
இப்போதைய நிலைமை என்ன?
தமிழ் அரசியல் கைதிகள் வருடந்தோறும் பொங்கல் தினத்தன்று பொங்கல் பொங்கி இறை வணக்கம் செய்து தங்களுடைய விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்வது வழக்கம். அதனையொட்டி
இந்த வருடமும் பொங்கலுக்கு அவசியமான பொருட்களைப் பெற்றுத் தருமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனை நிறைவேற்றுவதற்காக அவர் வியாழக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அரசியல் கைதிகள், தற்போதைய தமது நிலைமைகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர்.
அவற்றில் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கத்தக்க விடயங்களும் இருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வெலிக்கடையில் உள்ள அரசியல் கைதிகளின் தகவல்களுக்கமைய நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலும் 130 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆயினும் இது அதிகாரபூர்வமான தகவலா என்பது தெரியவில்லை. வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரம் 78 அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்தவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரணை செய்யும் நீதிமன்றங்களில் இரண்டு வாரங்களுக்கு
ஒரு தடவை வழக்கு விசாரணைகள் நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அரசியல் கைதிகள் கூறுகின்றனர். வழக்குகள் குறைந்தது ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒரு தடவையே
விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய சந்தர்ப்பங்களிலும், வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதிலேயே அதிக அக்கறை செலுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அத்துடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்த ஜனாதிபதி தனது உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டால் கைதிகளுடன் தாங்களும் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபடுவோம் என சிறைச்சாலைக்கு வருகை தந்து உறுதியளித்த தலைவர் இரா.சம்பந்தன் தங்களைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமல்லாமல், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வீதியூடாக மாதம்
இருதடவைகள் தவறாமல் நாடாளுமன்றத்திற்குப் போய் வந்த போதிலும் சிறைச்சாலையில் வாடும் தங்களை எவரும் வந்து பார்ப்பதுகூட இல்லை. தங்களை முற்றாக அவர்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கின்றது என்றும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு அவர்கள் தொடர்பான வழக்குகளை ஏற்கனவே உறுதியளித்துள்ளவாறாக, இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை என்ற
ரீதியில் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். அல்லது மனிதாபிமான அடிப்படையில் விசாரணை என்ற போர்வையில் பல வருடங்களாகத் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என
அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
நீண்டகால பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளின் விடயம் மனிதாபிமானத்துடன் சம்பந்தப்பட்டது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ள
நல்லிணக்கச் செயற்பாட்டுடனும் தொடர்பு கொண்டிருக்கின்றது. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் கொண்டுள்ள பாராமுகமான போக்கைக் கைவிட்டு துரிதமாகச் செயற்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழி செய்ய வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்
இதுவிடயத்தில் தீவிர கவனம் செலுத்தி, அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வழி செய்ய வேண்டும்.
இந்த காரியங்கள் இந்தத் தைப்பிறப்புடனாவது, நிறைவேறுமா?
பகிரவும்...