Main Menu

பிரான்ஸில் தீவிரமடையும் போராட்டங்களால் Baccalauréat தேர்வில் மாற்றம் இல்லை என அரசாங்கம் அறிவிப்பு

பிரான்ஸில் உயர்நிலைப் பாடசாலை மாணவர் போராட்டங்களால் பாடங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், பாகலோரியா இறுதித் தேர்வில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று கல்வி அமைச்சர் எடுவார் ஜெஃப்ரே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்வு முறையை மாற்றுவது அல்லது அட்டவணையைத் பிற்போடுவது  மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

போராட்டங்கள் காரணமாகப் பல மாணவர்கள் சில நாட்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் போன நிலையில், தேர்வுக்கான தயாரிப்பில் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளது.

இருப்பினும், பாடசாலைகளுக்கு இடையே பாதிப்பின் அளவு மாறுபடுவதால், அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு மாற்றத்தை அறிவிப்பது சரியான தீர்வாகாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாகலோரியா தேசிய அளவில் ஒரே தரத்துடன் நடத்தப்பட வேண்டிய தேர்வு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வகுப்புகள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ, பெப்ரவரி அல்லது ஈஸ்டர் விடுமுறைக் காலங்களில் கூடுதல் பயிற்சி மற்றும் விடுபட்ட பாடங்களை மீள்பார்க்கும் வகுப்புகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள “வெற்றிப் பயிற்சி” திட்டத்தை விரிவுபடுத்தி, தேவைப்படும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள்.

தொடர்ச்சியான மதிப்பீட்டில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பாடசாலைகள் தனித்தனியாக ஆய்வு செய்யலாம் என்றும், சில சூழல்களில் மதிப்பெண்களை ஒரு தவணைக்குப் பதிலாக முழு அரையாண்டு அடிப்படையில் கணக்கிடுவது போன்ற வழிகளைப் பரிசீலிக்கலாம் என்றும் ஜெஃப்ரே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைத் தளமான பார்கூர்-சூப் கால அட்டவணையிலும் மாற்றம் செய்யப்படாது என அவர் கூறியுள்ளார்.