Main Menu

பிரான்ஸ் : நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் – 448 பேர் கைது, 53 காவல் துறையினர் காயம்

ஊதிய உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நவம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் சுமார் 1.6 மில்லியன் பேர் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், உள்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 193 இடங்களில் நடைபெற்ற பேரணிகளில் சுமார் 5 75 000 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் பரிஸ் நகரில் 65 000 பேர் பங்கேற்றதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, பரிஸ் நகரில் மட்டும் 3  50 000 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டதாக CGT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினரின் புள்ளிவிபரங்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.

இதற்கிடையில், நாடு முழுவதும் சுமார் 500 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சின் தற்காலிக அறிக்கையின்படி, மொத்தம் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் 53 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், தீ விபத்துகள் தொடர்பாக 86 தடவைகள் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிஸ் நகரில் நடைபெற்ற பேரணியின் போது முகமூடி அணிந்த சிலர் பல்வேறு இடங்களில் சேதங்களை ஏற்படுத்தியதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, Lyon மற்றும் Rennes நகரங்களிலும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிகள் அமைப்புகளின் பங்கேற்புடன் எதிர்வரும் திங்கட்கிழமை சமூக விவகாரங்கள் தொடர்பான மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகமான Matignon அறிவித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை முன்னெடுத்து வரும் தொழிலாளர் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சரிடம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை ஊழியர்களின் பிரதிநிதிகளுடனும் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.