மாணவர் போராட்டம், இனவாதம், ஊதிய உயர்வு: ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து
பாடசாலை மாணவர்களின் போராட்டம், பல்கலைக்கழக அனுமதி முறைமையான Parcoursup, மக்களின் வாங்கும் சக்தி மற்றும் இனவாதம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளரும் YouTube பிரபலமுமான Hugo Travers நடத்திய நேர்காணலில், புதன்கிழமை அக்டோபர் 29 திகதியன்று பங்கேற்ற அவர், பல வாரங்களாகத் தொடர்ந்து வரும் மாணவர்களின் போராட்டம் குறித்து விரிவாகப் பேசினார். Toussaint விடுமுறைக்குப் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மாணவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதில் அரசாங்கம் தாமதமாகச் செயற்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் கூட்டாக விரைவான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் ஒப்புக்கொண்டார்.
போராட்டங்களின்போது காயமடைந்த மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்த அவர், இரு தரப்பினரும் அமைதிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். காவல்துறையினரின் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பிலும் தெளிவான விளக்கங்கள் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
அக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்களின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், போராட்டங்களின்போது TikTok, Instagram, Snapchat மற்றும் X ஆகிய சமூக ஊடகங்களுக்கான அணுகலைத் தற்காலிகமாகத் துண்டிப்பது தொடர்பில் பிரதமர் Sébastien Lecornu ஆலோசனைகளை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து மக்ரோன் விரிவான விளக்கங்களை வழங்கவில்லை. போராட்டங்களின்போது வன்முறைகள் மற்றும் கொள்ளைகளுக்கு அழைப்பு விடுக்கும் சட்டவிரோத உள்ளடக்கங்களைச் சமூக ஊடக நிறுவனங்கள் ஆரம்பத்தில் போதுமான அளவு அகற்றவில்லை என்றும், பின்னர் அதிகாரிகளுடன் இணைந்து அதிகளவிலான உள்ளடக்கங்களை நீக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பல்கலைக்கழக அனுமதிக்கான Parcoursup முறைமை முந்தைய முறையைவிடச் சிறந்ததாக இருந்தாலும், அதில் மாணவர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதால் சீர்திருத்தம் அவசியம் என அவர் குறிப்பிட்டார். மாணவர்களைத் தெரிவுசெய்வதற்கான அளவுகோல்கள் மேலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், அதிக மாணவர் நெருக்கடி காணப்படும் இடங்களில் கூடுதல் வகுப்புகளைத் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2017ஆம் ஆண்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 3 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், குறைந்தபட்ச ஊதியமான SMIC-ஐ விடக் குறைவான சம்பளத்தை வழங்கும் தொழில்துறைகள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தினார். SMIC ஊதியத்தை அரசாங்கம் மீண்டும் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், அந்த முடிவு பிரதமர் Sébastien Lecornu தொடர்பானது எனக் குறிப்பிட்டார். தொழிற்சங்கமான CGT வெளியிட்ட ஆய்வின்படி, 122 தொழில்துறைகளில் குறைந்தபட்சம் ஒரு ஊதிய நிலை SMIC-ஐ விடக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இனவாதமும் யூத எதிர்ப்புவாதமும் அதிகரித்து வருவதாகக் கவலை வெளியிட்ட ஜனாதிபதி, Trappes நகரில் இடம்பெற்ற இனவாதத் தீவிரவாதத் தாக்குதலையும் சுட்டிக்காட்டினார். சில அரசியல் இயக்கங்கள் இத்தகைய போக்குகள் வலுப்பெறுவதற்கு இடமளித்துள்ளதாகக் கூறிய அவர், Rassemblement National (RN) உள்ளிட்ட தீவிர வலதுசாரி அரசியல் தரப்புகளையும், La France insoumise தொடர்பான விவகாரங்களையும் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் இனவாதச் சூழல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக அரசியல், சமூக மட்டங்களில் விழிப்புணர்வும் உறுதியான நடவடிக்கைகளும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
