Main Menu

பிரான்ஸின் La Courneuve இல் தமிழ் பெண்ணின் சடலம் மீட்பு

பிரான்ஸின் La Courneuve நகரில், கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் உட்பகுதியில் தமிழ் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக குறித்த நிலையத்தின் உரிமையாளர்  அவரது மனைவி உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை இரவு, அந்த நிலையத்தில் உள்ள வாகனத்தில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயதான குறித்த பெண் சில நாள்களாக காணாமல் போயிருந்ததாகவும், அவரைக் கடைசியாக பார்த்தவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், கார் பழுதுபார்ப்பாளரின் மனைவி பொலிஸாரை தொடர்புகொண்டு, தனது கணவர் ஒருவரை கொலை செய்துள்ளதாக
தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வாகனத்தில் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, பழுதுபார்ப்பாளருக்கும் அவரது வாடிக்கையாளரான பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதன்போது கொலை செய்ததாகவும் மனைவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கார் திருத்தும் நிலையத்தில் உரிமையாளர் பிரதான சந்தேக நபராகவும்,  அவரது மனைவி உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் மூன்றாவது நபரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இவ்வழக்கில் கடுமையான சூழ்நிலைகளில் திட்டமிட்டு கொலை செய்தல் என்ற பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டு, Seine-Saint-Denisயின் நீதித்துறைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.