பிரான்ஸ் : நவம்பர் 1 முதல் புதிய நடவடிக்கைகள் அமுல்
ஒவ்வொரு மாதமும் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களின் அடிப்படையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு புதிய நடவடிக்கைகள் அமுலுக்கு வருகின்றன.
1. எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு
சமையல் மற்றும் தண்ணீர் சூடாக்குவதற்கான எரிவாயு விலை 6.7 சதவீதத்தாலும், வீட்டைச் சூடாக்குவதற்கான எரிவாயு விலை 8.26 சதவீதத்தாலும் உயர்கிறது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும்.
2. இறக்குமதிப் பொதிகளுக்கு புதிய வரி
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நவம்பர் 1 முதல் புதிய கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது. Shein, Temu, AliExpress போன்ற சீன இணையவழி வர்த்தகத் தளங்கள் மூலம் அனுப்பப்படும் பொதிகளில் உள்ள ஒவ்வொரு பொருள் வகைக்கும் 2 யூரோ கட்டணம் அறவிடப்படும். ஏற்கெனவே ஒவ்வொரு பொதிக்கும் 3 யூரோ சுங்க வரி நடைமுறையில் உள்ள நிலையில், இந்தப் புதிய கட்டணமும் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.
3. ஓய்வூதியத் தொகை 1.4% அதிகரிப்பு
தனியார் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 14 மில்லியன் பேருக்கு வழங்கப்படும் Agirc-Arrco மேலதிக ஓய்வூதியம் நவம்பர் 1 முதல் 1.4 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகள் அமைப்புகளுக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிகரிப்பு முடக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
4. குளிர்கால வீட்டு வெளியேற்றத் தடை அமுல்
நவம்பர் 1 முதல் மார்ச் 31 வரை குளிர்கால வெளியேற்றத் தடை (Trêve hivernale) நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, வாடகை செலுத்தத் தவறியிருந்தாலும் சட்டபூர்வமாக வீட்டில் வசிக்கும் வாடகையாளர்களை இந்தக் காலப்பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேற்ற முடியாது. எனினும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மற்றும் குடும்ப நீதிமன்றத்தின் குறிப்பிட்ட வெளியேற்ற உத்தரவுகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.
5. புகையிலை இல்லா மாதம் மீண்டும் ஆரம்பம்
நவம்பர் 1 முதல் 30ஆம் திகதி வரை 11ஆவது ஆண்டாக ‘Mois sans tabac’ எனப்படும் புகையிலை இல்லா மாதம் முன்னெடுக்கப்படுகிறது. 30 நாட்கள் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் நிரந்தரமாகப் புகைப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கத்தைக் கைவிட விரும்புவோருக்கு இணையவழி ஆலோசனைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வழங்கப்படுகின்றன.
6. 34 மாவட்டங்களில் பனிக்கால டயர்கள் கட்டாயம்
நவம்பர் 1 முதல் மார்ச் 31 வரை மலைப்பகுதிகளைக் கொண்ட 34 மாவட்டங்களில் குளிர்கால டயர்கள் அல்லது பனிச்சங்கிலிகள் கட்டாயமாக்கப்படுகின்றன. Alpes, Massif central, Jura, Pyrénées மற்றும் Vosges பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும். வாகனங்களில் நான்கு குளிர்கால டயர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது உலோகச் சங்கிலிகள், வழுக்கல் தடுப்பு உறைகள் வைத்திருக்க வேண்டும்.
7. நோய்விடுப்புக் கொடுப்பனவில் புதிய வரம்பு
நவம்பர் 1 முதல் நோய்விடுப்புக் காலத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு வழங்கும் தினசரிக் கொடுப்பனவுகளுக்கான வருமான உச்சவரம்பு மாற்றப்படுகிறது. புதிய விதிமுறையின்படி, அதிகபட்ச வருமான வரம்பு 1.8 மடங்கு SMIC ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.8 மடங்கு SMIC-ஐ விட அதிகமான சம்பளம் பெறும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் நோய்விடுப்புக் கொடுப்பனவு குறையக்கூடும்.
8. மாணவர்களுக்கு பாலியல் வன்முறை தொடர்பான கேள்வித்தாள்
சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் கண்டறியும் நோக்கில் கல்வி அமைச்சு புதிய கேள்வித்தாள் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மழலையர் பள்ளியின் இறுதி வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளியின் இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ப ஐந்து வகையான கேள்வித்தாள்கள் வழங்கப்படும். நவம்பர் 2 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
