Main Menu

பாடசாலைகள் மீண்டும் வழமைக்குத் திரும்ப வேண்டும் – மாணவர்களிடம் மக்ரோன் அரசு கோரிக்கை

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் போராட்டங்களையும் கல்வி நிறுவனங்களை முடக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மாளிகையான Élysée எதிர்பார்ப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வார இறுதியில் நடைபெற்ற சமூகப் போராட்டத்தின் மூன்றாவது கட்டமான ‘Acte III’ இல், முந்தைய போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளதால், மாணவர்கள் மீண்டும் வகுப்பறைகளுக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாக Élysée வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக, பல்கலைக்கழக அனுமதிக்கான Parcoursup நடைமுறையில் 2027ஆம் ஆண்டு முதல் பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதுடன், 2028ஆம் ஆண்டில் தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து இம்மானுவல் மக்ரோன் கலந்துரையாடியிருந்தார். மேலும், Toussaint விடுமுறைக்குப் பின்னர் திங்கட்கிழமை மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி அமைதியான முறையில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் எனவும் அவர் முன்னதாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற பாரிய வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னர், அக்டோபர் 24 மற்றும் 31ஆம் திகதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் ஒப்பீட்டளவில் அமைதியான முறையில் நிறைவடைந்தன. பாதுகாப்புப் படையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் இந்த முறை வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. அக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை முன்கூட்டியே கணிக்கவும் தடுக்கவும் பாதுகாப்புத் துறையினர் தவறிவிட்டதாக முன்னதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், அக்டோபர் 24 மற்றும் 31ஆம் திகதிகளில் பாடசாலை விடுமுறைக் காலத்தில் போராட்டங்கள் நடைபெற்றதால், முந்தைய கட்டங்களை விட இளைஞர்களின் பங்கேற்பு குறைவாக இருந்திருக்கலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.