அடிபணிய வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு Mélenchon எச்சரிக்கை
வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் மூன்றாவது கட்டம், அக்டோபர் 31ஆம் திகதி சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இடதுசாரிக் கட்சியான La France Insoumise (LFI) கட்சியின் தலைவர் Jean-Luc Mélenchon, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதாகத் தெரிவித்ததுடன், அவர் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் அல்லது பதவியிலிருந்து விலக வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். தொடர்ந்து மூன்றாவது வாரமாக இடம்பெறும் போராட்டங்களின் உண்மையான அளவை ஊடகங்கள் குறைத்துக் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் Jean-Luc Mélenchon, சனிக்கிழமை பரிஸ் நகரில் நடைபெற்ற பேரணியிலும் நேரடியாகக் கலந்துகொண்டார்.
Porte de Bagnolet பகுதியில் இருந்து Porte de Charenton வரையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பின்னர், சமூக வலைத்தளமான X இல் கருத்துத் தெரிவித்த அவர், பல Metro தொடருந்து நிலையங்கள் மூடப்பட்டிருந்த போதிலும், ஊடகங்கள் ஒரு வாரமாகப் போராட்டங்கள் குறித்து அச்சமூட்டும் தகவல்களை வெளியிட்ட போதிலும், போராட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டிருந்த போதிலும் மக்களின் வருகை கடந்த வாரத்தைப் போலவே அதிகமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த சனிக்கிழமை போலவே இம்முறையும் போராட்டக்காரர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் மீண்டும் குறைத்துக் காட்டுவதன் மூலம், மக்ரோன் இந்த மோதல் நிலையைத் தொடர்ந்து நீடிக்க ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார். கடந்த வாரமும் ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியிருக்காது என்றும் Jean-Luc Mélenchon தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, அக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்களில் நாடு முழுவதும் 3 20 000 பேர் பங்கேற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 24ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தில் 4 10 000 பேர் கலந்துகொண்டிருந்த நிலையில், இம்முறை பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்களின் கணக்கின்படி சுமார் 5 00 000 பேர் இந்தப் பேரணிகளில் கலந்துகொண்டுள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான கோரிக்கைகளுடன், உயர்நிலைப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்விச் சூழல் மற்றும் மாணவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் பேரணிகளின் இறுதியில் சில மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், Marseille மற்றும் Toulouse நகரங்களிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
