Main Menu

பிரான்ஸ் : 10 சதவீத சம்பள உயர்வு கோரும் தொழிற்சங்கங்கள்

தற்போது மாதாந்த குறைந்தபட்ச ஊதியமாக (SMIC) 1,477.93 யூரோக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் பணவீக்கத்தின் அடிப்படையில் இந்த ஊதியம் தானாகவே அதிகரிக்கப்படவுள்ளது. எனினும், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக கடந்த நவம்பர் 5ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, குறைந்தபட்ச ஊதியத்தில் கணிசமான அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி பிரதமர் தலைமையில் Matignon இல் நடைபெறவுள்ள சமூக மாநாட்டில் அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் அமைப்புகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. தற்போது  ஒரு மணித்தியாலத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 12.31 யூரோக்கள் மொத்த ஊதியமாகவும், 9.74 யூரோக்கள் நிகர ஊதியமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் பணியாற்றும் ஒருவருக்கு மாதாந்தம் 1,867.02 யூரோக்கள் மொத்த ஊதியமாகவும், 1,477.93 யூரோக்கள் நிகர ஊதியமாகவும் வழங்கப்படுகின்றது. இந்நிலையில், CFDT தொழிற்சங்கம் மாதாந்த ஊதியத்தில் 100 யூரோக்கள் நிகர அதிகரிப்பைக் கோரியுள்ளது. CGT தொழிற்சங்கம் 10 சதவீத ஊதிய உயர்வை வலியுறுத்தியுள்ளது. இது மாதாந்தம் சுமார் 150 யூரோக்கள் அதிகரிப்பைக் குறிக்கின்றது.

Force Ouvrière அமைப்பு குறைந்தபட்ச ஊதியத்தை 2,000 யூரோக்களாக உயர்த்த வேண்டும் எனக் கோரியுள்ளது. அதேவேளை, CFTC தொழிற்சங்கமும் பணவீக்கத்தை விட அதிகமான ஊதிய உயர்வை முன்கூட்டியே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், தொழில்துறை ஊதியக் கட்டமைப்புகளில் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் கீழான சம்பள நிலைகள் இருக்கக்கூடாது என்றும், அதனை மீறும் நிறுவனங்களுக்கு நிதி ரீதியான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையில், குறைந்தபட்ச ஊதியத்தை மாதாந்தம் 1,500 யூரோக்களைக் கடந்த நிலைக்கு உயர்த்துவது முக்கியமானது என தொழிலாளர் அமைச்சர் Jean-Pierre Farandou தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 1.5 சதவீத ஊதிய உயர்வு, அதாவது மாதாந்தம் 22.07 யூரோக்கள் அதிகரிப்பு தேவைப்படும். எனினும், இது தொழிற்சங்கங்கள் கோரும் உயர்வை விட மிகவும் குறைவானதாகும்.

மறுபுறம், முதலாளிகள் அமைப்புகள் ஊதிய உயர்வைச் சமாளிப்பதற்காக நிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்பு மற்றும் தொழிலாளர் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளன. நிறுவனங்களுக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் ஊதிய உயர்வை வழங்குவதற்கான சலுகைகள் அவசியம் என Medef அமைப்பு தெரிவித்துள்ளது.

நவம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னர் அரசாங்கம் மூன்று நாட்களுக்குள் இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய நிலையில் உள்ளது. இந்த மாநாட்டின் முடிவுகளைத் தொடர்ந்து போராட்டங்களைத் தொடர்வது தொடர்பாக தொழிற்சங்கங்கள் தீர்மானிக்கவுள்ளன.