சர்வதேச பதற்றம் அதிகரிப்பு – கட்சித் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவசர சந்திப்புக்கு அழைப்பு
ஜனாதிபதி Emmanuel Macron, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி Élysée மாளிகையில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்துள்ளார். சர்வதேச நிலைமையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள “வேகமான மோசமடைவு” மற்றும் அதன் தேசிய அளவிலான தாக்கங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் மோதல்கள், அவற்றின் தாக்கத்தால் பிரான்சின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து Macron கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்கவுள்ளார். ஒவ்வொரு கட்சியிலிருந்தும் கட்சித் தலைவர் அல்லது ஜனாதிபதி வேட்பாளர் என ஒருவருக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Rassemblement national கட்சியின் தலைவர் Jordan Bardella, Les Républicains கட்சியின் தலைவர் Bruno Retailleau, Renaissance வேட்பாளர் Gabriel Attal, MoDem சார்பில் François Bayrou, UDI சார்பில் Hervé Marseille உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இடதுசாரி தரப்பில் Marine Tondelier, Fabien Roussel, Olivier Faure, Raphaël Glucksmann மற்றும் Manuel Bompard ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் தேசிய சட்டமன்றத் தலைவர் Yaël Braun-Pivet மற்றும் செனட் தலைவர் Gérard Larcher ஆகியோரும் Élysée மாளிகைக்கு வரவுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் Sébastien Lecornu மற்றும் இராணுவம், உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மட்டுமே ஜனாதிபதியுடன் கலந்துகொள்வார்கள். ஜனாதிபதியிடம் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்தகவல்கள், இராணுவ உளவுத்தகவல்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தொடர்பான தகவல்கள் அதிகாரிகளால் பகிரப்படவுள்ளதாக Élysée தெரிவித்துள்ளது.
