Main Menu

பிரான்ஸ்: நவம்பர் 3 மற்றும் 5ஆம் திகதிகளில் பாடசாலைகள் முடக்கம் – மாணவர் சங்கங்கள் அழைப்பு

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் கல்வித்துறைப் பிரச்சினைகளுக்கு எதிராகத் தொடரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், நவம்பர் 5ஆம் திகதி வியாழக்கிழமையும் உயர்நிலைப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முடக்குமாறு மாணவர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அக்டோபர் 31ஆம் தேதி சனிக்கிழமை பரிஸ் நகரில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான பேரணிக்கு முன்னதாக, உயர்நிலைப் பாடசாலை மாணவர் சங்கமும், மாணவர் ஒன்றியமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும், நவம்பர் 5ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்குமாறும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பரிஸ் நகரின் Porte de Bagnolet பகுதியில் நடைபெற்ற பேரணியின்போது, மாணவர் ஒன்றியத்தின் பேச்சாளர் Sabrina Kharbach அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார். ஒவ்வொரு வாரமும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், போராட்டங்களைத் தடுக்க முயற்சிப்பவர்களுக்கு மாணவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார். இதன்படி, நவம்பர் மாதம் 3ஆம் திகதி பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முடக்கப்படும் என்றும், நவம்பர் மாதம் 5ஆம் திகதியும் முடக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதேவேளை, இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை உறுதியான பதில் வழங்கவில்லை என தேசிய மாணவர் ஒன்றியத்தின் (UNEF) பொதுச் செயலாளர் Manon Moret தெரிவித்துள்ளார்.

பாடசாலை விடுமுறைக்கு முன்னதாகவே பல உயர்நிலைப் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மாணவர்களால் முடக்கப்பட்டிருந்தன. கல்வி கற்பதற்கான சிறந்த சூழல், Parcoursup முறையை இரத்துச் செய்தல், கூடுதல் ஆசிரியர்களை நியமித்தல், கல்வி நிறுவனங்களுக்கான நிதி மற்றும் அடிப்படை வசதிகளை அதிகரித்தல், பழுதடைந்த கட்டடங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். அரசாங்கம் அண்மையில் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும் அவை மாணவர் சங்கங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஒவ்வொரு வகுப்பறையிலும் விலையுயர்ந்த கணினிகளைக் கேட்கவில்லை; மாறாக, கண்ணியமான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகளையே கோருவதாக உயர்நிலைப் பாடசாலை மாணவர் சங்கத் தலைவர் Ryad Rani தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 2ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்யத் தயாராக வேண்டும் என்றும், தேவையானால் வெள்ளிக்கிழமை வரையிலும் போராட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.