Main Menu

போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்திற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது, மொத்தமாக 15,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில், பொதுமக்கள் அதிகளவில் திரளும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. காவல்துறையினர், ஜொந்தார்ம்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் Sentinelle இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 14,000 பாதுகாப்புப் படையினர் பரிஸில் களமிறக்கப்படுவார்கள் என Laurent Nuñez தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போப் லியோன் XIV-ன் வருகைக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக லூர்த் நகரில் சுமார் 1,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். செப்டெம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும், போப்பின் பயணத்தை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.