Main Menu

4 ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலுக்கு தயாரானது ஸ்பெயின்

எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி தேர்தலை நடத்த ஸ்பெயின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் நான்காவது முறையாக வாக்களிக்கவுள்ளனர்.

ஐரோப்பிய நாணய வலயங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஸ்பெயினில், ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சோசலிச கட்சியால் ஆட்சி செய்ய போதுமான இடங்கள் இல்லாமையினால் அடுத்தடுத்து அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன.

இதனால் கட்சித் தலைவர்கள் ஒரு அரசாங்கத்தை ஒன்றிணைக்க பேச்சுவார்த்தை நடத்துவதை விடுத்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த சோசலிச தலைவர் பெட்ரோ சான்செஸ், “அரசாங்கத்தை அமைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் பெரும்பான்மை (பாராளுமன்றத்தில்) இல்லை, இது நவம்பர் 10 ஆம் திகதி மீண்டும் தேர்தலுக்கு நம்மைத் தள்ளுகிறது,” என கூறியிருந்தார்.

ஊழல் மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு பழமைவாதிகள் வெளியேற்றப்பட்ட பின்னர் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமரான சான்செஸ், ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலுக்குப் பின்னர் பதில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த தேர்தலில் சோசலிச கட்சி அதிக இடங்களை வென்றாலும், 350 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சொந்தமாக பெரும்பான்மையைப் பெற போதுமான இடங்களை வெல்ல முடியாமல் போனமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஸ்பெயினின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்றாலும் அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெறுவதனால், தொழிலாளர் மற்றும் ஓய்வூதியம் போன்ற விடயங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு மேலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...