Main Menu

ஹொங்கொங்கில் களமிறங்கியது சீன இராணுவம்!

ஹொங்காங்கில் கடந்த 5 மாதங்களாக சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் சீனா தனது இராணுவத்தை களமிறக்கியுள்ளது.

சீன இராணுவத்தின் ஹொங்கொங் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களே ஹொங்கொங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சீனா தனது இராணுவத்தை போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில், சீன இராணுவத்தினர் போராட்டக்காரர்களால் நகர வீதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுதல் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹொங்கொங்கில் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் முதன்முறையாக சீன இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளமை போராட்டக்காரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை முன்னெடுக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதி பரிமாற்ற சட்ட வரைபை இரத்துச் செய்தல், ஹொங்கொங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்த போராட்டம் வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த நிலையில் நாளடைவில் தினமும் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட வரைபை கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்த போதும் சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், அங்கு செயற்பட்டு வரும் சீன நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் சூறையாடி வருகின்றனர். மேலும், ஹொங்கொங் வீதிகளில் தடுப்புகளை அமைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஹொங்கொங் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...