Main Menu

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது ; நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்று  தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.    

தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரையிலான காலமே வாக்களிப்புக்கான நேரமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஊடகங்களில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரம் நீடிக்கத் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருந்த செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லை. இவ்வாறான எந்தவித ஆலோசனைகளோ அல்லது தீர்மானங்களோ எம்மால் எட்டப்படவில்லை.

எனவே, மக்கள் இறுதி நேரம் வரை காத்திராமல், நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, தத்தமது வாக்குகளைப் பதியுமாறும் அவர் வேண்டியுள்ளார்.

நாட்டின் தேர்தல் வரலாற்றில் வாக்குச் சீட்டு மிக நீளமானதாகவும்,  ஆகக் கூடிய வாக்காளர்களையும் கொண்ட தேர்தலாகவும் இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்திருக்கும் நிலையில்,  வாக்காளர் ஒருவர் தாம் தெரிவு செய்யும் வேட்பாளரின் சின்னத்தைத் தேடிப்பிடிப்பதில் நேரமெடுக்கலாம் எனத் கருதப்படுவதால், கூடுதலாக வாக்காளர்களைக் கொண்ட வாக்களிப்பு நிலையங்களை இரண்டாக அதிகரிப்பதற்கு மாத்திரமே  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாக்குப் பெட்டிகளும் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டிய நிலையும் உருவாகி உள்ளது. இதனால், உரிய நேரத்தில் வாக்களிப்பை நடத்தி முடிக்கக்கூடிய விதத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலைமையை உணர்ந்து வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பது சிரமங்களைத் தவிர்க்க உதவ முடியும். இது தவிர, தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை காணப்படுவதால், பிற்பகல் வேளையில்  மழை பெய்யக் கூடுமாகையால், முற்பகலிலேயே வாக்களிப்பது சிறப்பானதாக அமையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...