Main Menu

கோத்தாபய வென்றால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரம் தொடரும் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால் 25 வருடங்களுக்கு ராஜபக்ஷமாரின் சர்வாதிகார ஆதிக்கத்துக்கு ஆளாகி விடுவோம் என்றும், நல்லாட்சியின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டாலும் அரசதுறைகளுக்கும் , அரச ஊழியர்களுக்கும் பெரும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்ததார்.

மாவத்தகமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும்  உரையாற்றுகையில்

ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயகத்தன்மை மிக்க கட்சியாகும். கடந்த தினங்களில் எமது வேட்பாளரை தெரிவு செய்யும் போது நாங்கள் மற்றவர்கள் போல் குடும்பத்தில் ஒருவரை களமிறக்க வில்லை , கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி  , மக்களின் விருப்பிற்கிணங்கவே எமது வேட்டபாளரை நாங்கள் தெரிவு செய்தோம். இதன்போது எமது கட்சி உறுப்பினர்களிடையில் விவாதங்கள் மற்றும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த போதும் இறுதியில் பிரதமரின் தலைமையில் சஜித் பிரேமதாசவை எமது வேட்பாளராக தெரிவு செய்தோம். அடித்தள மக்களின் விருப்பிற்கமையவே அவரை நாங்கள் வேட்பாளராக தெரிவு செய்தோம்.

நாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை வெற்றிபெற செய்யாவிட்டால் ,இனிவரும் 25 வருடத்திற்கு ராஜபக்ஷர்களின் ஆதிக்கத்திற்கு ஆளாகிவிடுவோம். அவர்கள் குடும்பத்தின் அனைத்து சந்ததியினரும் நாட்டை ஆட்சிக்குட்படுத்தும் போது நாட்டில் ஜனநாயகம் என்பது இல்லாமல் போய்விடும்.

நல்லாட்சியை நாங்கள் கொண்டுவந்தாலும் அதில் காணப்பட்ட குழப்பங்களினால் நீங்கள் எங்களிடம் எதிர்பார்த்த அனைத்து விடயங்களையும் எம்மால் செய்ய முடியாமல் போனது. ஆனாலும் எமது ஆட்சியில் அரச நிறுவனங்கள் அரச ஊழியர்கள் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களுக்கு பெரும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டன

2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலக்கட்டத்தில்  சால்வையின் சாபத்திற்கு , சூனியத்திற்கும் எமது நாடு உள்ளாகியிருந்தது. எம்மை சர்வாதிகாரம் மிக்க தலைவர் ஒருவர் ஆட்சிசெய்தார். அன்று நாட்டில் ஊழல்  மோசடிகள் காணப்பட்டதுடன், வெள்ளைவேன் கலாச்சரமும் காணப்பட்டது. அன்று மக்கள் உணவு உட்கொள்ள மாத்திரமே வாயை திறக்க முடியும் எந்தவிதமான கருத்துகளையும் அவர்களால் தெரிவிக்க முடியாது. அவர்களின் விருப்பத்திற்கமைய எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத நிலையிலேயே இருந்தன.

அந்த அரச பயங்கரவாதியிடமிருந்து நாம் நாட்டை காப்பாற்றி வந்துள்ளோம். மீண்டும் அந்த பயங்கரவாத செற்பாடுகளுக்கு எமது நாடு இலக்காவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.மீண்டும் மோசடி செயற்பாடுகளுக்கு நாட்டை பலியாக்காமல் நாம் சிறந்த தீர்வை காணவேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றிப் பெற்றாலே எதிர்வரும் மாகாணசபை மற்றும் பொது தேர்தல்களில் வெற்றிப் பெறமுடியும்.

எமது ஆட்சியின் போது அரச நிறுவனங்கள் சிறப்பாக செயற்பட்டன. இந்த முறைதான் எதிர்கால சந்ததியினருக்கு முக்கியம். அதேவேளை எமது ஆட்சியின் போது மாணிக்கம் முத்து போன்ற விலைமதிப்பற்ற சொத்துகள் வழங்கப்படாவிட்டாலும் அதைவிட பெறுமதியான அரசியலமைப்புச் சபை ஒன்றை உறுவாக்கியுள்ளோம். இதன் காரணமாக  திணைக்களங்கள் ,நீதி துறை மற்றும் அரச நிறுவனங்களுக்கு சுதந்திரம்  செயற்படுகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இங்கு பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதரவாளர்களையே நோக்கி நிற்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில் பொலிஸார் மேடையை நோக்கியே நிற்பார்கள் அது ஏன் தெரியுமா? மேடையில் ஏறும் அனைவருக்கும் மரியாதை செலுத்துவதற்காகும்.  , ஆனால் அந்த நிலைமைகள் தற்போது மாறியுள்ளன.

பொலிஸார் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எம்மால் செய்யமுடியாது , அவர்களுக்கு பொறுப்பாக பொலிஸ் ஆணைக்குழு செயற்படுவதினால் அவர்களுக்கு குறைந்தது இடமாற்றமாவது எம்மால் பெற்றுக் கொடுக்க முடியாது. ஆனால் கடந்தகாலங்களில் இந்த நிலமைகள் எவ்வாறு இருந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதே நிலைமை நீதித்துறைக்கும் காணப்பட்டது.

தற்போது இலங்கையில் ‘சுப்பர்மேன்’ ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவர்தான் தேர்தல் ஆணையாளர் . தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அவர் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றார். தற்போது அவரே வீராக உள்ளார் கடந்த காலங்களில் தேர்தல் ஆணையாளர்களை அடக்கி வைத்தது போல் நாங்கள் அவரை எந்தவித கேள்விகளும் கேட்பதில்லை . எனவே அவர் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றார்.

ரஜபக்ஷர்கள் எமது ஆட்சியின் போது பிணைமுறி மோசடிகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுவருகின்றனர். இதுவே அவர்கள் எம் மீது வைக்கும் பிரதான குற்றச்சாட்டாகும் ஆனால் இந்த பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை இதன்போது 10 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 7 பில்லியன் ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் மீதம் உள்ள 3 பில்லியன் ரூபாய் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

மஹிந்தவின் ஆட்சிகாலத்திலே நாட்டில் மோசடிகள் , ஊழல்கள் தோற்றம் பெற்றன. இதன்போது அரச சொத்துகளும் பெருமளவில் கொள்ளையடிக்கப்பட்டன. பல நிறுவனங்களின் வருமானங்களில் மோசடிகள் இடம்பெற்றன. மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை கேட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் போது இராணுவத்தினரால் சூட்டுக் கொலைச் செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையிலே நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக தாம் ஆட்சிக்குவருவதாக கோத்தாபய தற்போது சொல்லி வருகிறார். இராணுவத்தினருக்கு தெரியும் அவரது பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து யுத்த காலத்தின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று அமெரிக்காவில் வாழ்ந்து விட்டு , 15 வருடங்களுக்கு பின்னரே நாட்டுக்கு வந்த அவருக்கு எப்படி நாட்டின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த முடியும்.மீதொட்டமுல்லையில் உள்ள புதையலை தோண்டி எடுப்பதற்காகவே அவர் மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கின்றார்.

எமது வேட்பாளர் அன்று காலி முகத்திடலில் வைத்து அவரது ஆட்சியில் என்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என்று மக்களுக்கு உறுதி மொழி வழங்கினார். அதேபோல் எனக்கு பாதுகாப்பு அமைச்சை  அவர் வழங்கினால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டுக்குள் இடம்பெறாத வகையிலும் எனது பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பேன்.

பகிரவும்...