Main Menu

வடகொரியா-தென்கொரியா எல்லையில் துப்பாக்கிச் சூடு! ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதற்றம்!

வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் பிளவுபடுத்தும், இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் இரு தரப்பினருக்கும் இடையில், துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம், தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 07:41 மணிக்கு மத்திய எல்லை நகரமான சியோர்வானில் ஒரு தென் கொரிய காவலர் சாவடி மீது, வட கொரியா துப்பாக்கி சூடு நடத்தியதாக, சியோல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், தென் கொரிய தரப்பில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. அதேபோல, வடகொரியாவும் இதுகுறித்து எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தென் கொரியா இரண்டு சுற்று துப்பாக்கிச் சூடு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டதாக இராணுவ அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும், ஆரம்பத்தில் மோதலை தூண்டியது யார் என்பது தொடர்பாக தெளிவான தகவல் இல்லை. இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டுபடிக்க வட கொரியாவை தங்கள் இராணுவ ஹொட்லைன் மூலம் தொடர்புகொள்ள முயற்சிப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் மூத்த தலைவர்களின் அமைப்பான ஜே.சி.எஸ் தெரிவித்துள்ளது.

ஐந்தாண்டுகளில் வட கொரிய துருப்புக்கள் நேரடியாக தெற்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது இதுவே முதன்முறை ஆகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு இடையக மண்டலத்தை உருவாக்கும் பொருட்டு 1953ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பின்னர், இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம் அமைக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, சியோல் அரசாங்கம் பெரிதும் பலப்படுத்தப்பட்ட எல்லையை அமைதி மண்டலமாக மாற்ற முயற்சித்தது. எல்லையில் இராணுவ பதற்றங்களைத் தணிப்பது வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இடையே, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பியோங்யாங்கில் நடந்த உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும்.

20 நாட்களுக்கு பிறகு கிம் ஜோங் உன் பொதுவெளியில் தோன்றிய ஒரு நாளுக்குப் பிறகு, இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...