Main Menu

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் தாக்குதல்- எண்ணெய் கிடங்கு எரிந்து நாசம்

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் கிடங்கு எரிந்து நாசமானது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை கண்டித்து ரஷியா அதன்மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீப காலமாக இந்த போரை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 2 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதலை தொடுத்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகினர். இந்த நிலையில் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீமியாவின் முக்கிய துறைமுக நகரமான செவஸ்டோபோலில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது நேற்று டிரோன் மூலம் தாக்குதல் நடந்தப்பட்டது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து மளமளவென எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இந்த டிரோன் தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கிரீமியா பிராந்தியத்தின் கவர்னர் மிகைல் ரஸ்வோசாயேவ் சமூகவலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் வினியோகம் தடைபடாது என்பதையும் அதில் அவர் தெரிவித்தார். உக்ரைன் படைகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதா? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே இது குறித்து ரஷியாவின் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் தரப்பில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரஷிய ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் வகையில் எந்தவொரு இலக்கையும் தாக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...