Main Menu

சந்திரபாபு நாயுடுவுக்கு புகழாரம்: ரஜினியின் பேச்சு சிரிக்கும் வகையில் உள்ளது- அமைச்சர் ரோஜா

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வைகொண்ட அரசியல் தலைவர். அவரது தொலைநோக்கு பார்வையால், ஐதராபாத் இப்போது ஹைடெக் நகராக மாறியுள்ளது. ஐதராபாத், நியூயார்க் போன்று வளர்ந்துள்ளது” என்றார். இந்த பேச்சுக்கு ஆந்திராவில் உள்ள மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கூறியதாவது:- ரஜினிகாந்த்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. ரஜினிகாந்த் உண்மை அறிந்து பேசினாரா என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் அனைவரும் விரும்பக்கூடியவர். ஹீரோவாக உள்ள நிலையில் அவர் உண்மை தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் பஜனைக் கூட்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் சந்திரபாபு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்தாரா. ரஜினிகாந்த் தன் உரையில் “விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என்.டி.ஆர் ஆசிகளை பொழிகிறார்’ என்று குறிப்பிட்டார். என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமே சந்திரபாபு நாயுடுதான் என்பது அனைவருக்கும் தெரியும். பிரதமராக கூடிய தகுதி கொண்ட என்.டி.ராமராவை சூழ்ச்சி செய்து அவரது பலத்தால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை அவருக்கு எதிராக திசை திருப்பி சட்டப்பேரவையில் இருந்து அழுது கொண்டு என்.டி.ராமராவ் வெளியே வர காரணமாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போது என்.டி. ராமராவ் பேசுகையில், சந்திரபாபு ஒரு திருடன். ஈரத் துணியை கழுத்தில் போட்டு இறுக்கக்கூடியவன் என பேசினார். சந்திரபாபு நாயுடு துரோகம் குறித்து என்.டி. ராமராவ் பேசியது ரஜினிகாந்துக்கு தெரியாதா. அவருக்கு தெரியவில்லை என்றால் என்.டி. ராமராவ் பேசிய சிடி என்னிடம் உள்ளது. அதை அனுப்பி வைக்கிறேன். பார்த்து தெரிந்து கொள்ளட்டும். ஐதராபாத் நியூயார்க் நகரை போன்று மாறி இருப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு விஷன் காரணம் என கூறியுள்ளார். 2003-வது ஆண்டுடன் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. அதன்பின்னர், இப்போது 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஐதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு, அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்கமுடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்து பார்க்க வேண்டும். விஷன் 2047 என சந்திரபாபு அறிவித்து உள்ளார். அதுவரை அவருடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோடாலி ஸ்ரீவெங்கடேஸ்வரராவ் எம்.எல்.ஏ. ரஜினி காந்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஹீரோவாகவும், இங்கு ஜீரோவாகவும் இருக்கும் ரஜினிகாந்தின் வார்த்தைகளை ஆந்திர மாநில மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...