Main Menu

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசி மேகன் பங்கேற்கவில்லை: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மறைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஹாரி-மேகன் தம்பதி மீண்டும் அரண்மனைக்கு வந்தனர். இதன் மூலம் பிரிந்த குடும்பம் ஒன்றாக சேரும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. இந்த நிலையில் ராணியின் மறைவுக்கு பின்னர் இங்கிலாந்து மன்னரான சார்லஸ் வருகிற 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்படுகிறார். இந்த விழாவில் பங்கேற்க ஹாரி- மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என யூகங்கள் எழுந்து வந்த நிலையில், இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது விளக்கமளித்துள்ளது. அதன்படி மன்னரின் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி மட்டும் பங்கேற்பார் எனவும், மேகன் பங்கேற்கமாட்டார் எனவும் அரண்மனை தெரிவித்துள்ளது. இதனிடையே மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில் அவரது மனைவி ஜில்பைடன் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் மன்னரின் முடிசூட்டு விழாவை குறிக்கும் விதமாக லண்டனை சேர்ந்த சிற்பிகள் மற்றும் சாக்லேட் தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து 5 அடி உயரத்தில் மன்னர் சார்லசின் மார்பளவு சிலையை முழுவதும் சாக்லேட்டை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். சுமார் 3 ஆயிரம் சாக்லேட்களை உருக்கி செய்யப்பட்டுள்ள இந்த சிலை காண்போரை கவரும் வகையில் உள்ளது.

பகிரவும்...