Main Menu

போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்காவிட்டால் அழிவுதான்- மைத்திரி

போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுப்பதன் ஊடாகவே பொருளாதார ஸ்திரத்தன்மைகொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “இன்று வறுமைக் கோட்டுக்குக் கீழ் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரை வறுமைக்கு முக்கியமான காரணமாக போதைப்பொருள் மற்றும் மதுபாவனை காணப்படுகிறது.

இவ்வாறான பிரச்சினைகளினால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், பெண்கள் இதனை வெளியில் காண்பித்துக் கொள்வதில்லை. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் இதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டோம். வறுமையை இல்லாது ஒழிப்பதற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரதானமாக களமிறங்குகிறேன். 1947ஆம் ஆண்டிலிருந்து நாட்டை ஆட்சி செய்த, அனைத்து அரசாங்கங்களும் நாட்டுக்காக சேவை செய்துள்ளன.

முடிந்தளவிற்கு அபிவிருத்திகளை மேற்கொண்டு சமூகங்களை உயர்த்தியுள்ளன. எனினும், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியினால் சிலருக்கு மேல்நிலைக்கு வர முடியாதுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தால் எதனையும் செய்ய முடியாது.

எமது பிரச்சினைகளுக்கு மதுபாவனை ஒருபோதும் தீர்வாகாது. நாம் இவற்றிலிருந்து மீண்டுவர வேண்டும். பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து, நாம் நாட்டு மக்களுக்காக ஸ்திரமான சேவையை மேற்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...