Main Menu

பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஒன்ராறியோ- பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, டர்ஹாம் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வூட்வியூ டிரைவ், அல்டோனா வீதியின் மேற்கிலும், ட்வின் ரிவர்ஸ் டிரைவின் தெற்கிலும் உள்ள தொழிலதிபரின் வீட்டிற்கு முன்னால், திங்கட்கிழமை பிற்பகல் இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், வீட்டிற்கு முன்னால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் உள்ள காணொளியினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதில், வெள்ளை ரக எஸ்.யு.வி ரக வாகனத்திலிருந்து 37 வயதான தொழிலதிபர்இறங்கிக் கொண்டிருந்த போது, புதிய மொடல் வெள்ளை காரில் வந்தவர்களில், சிலர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த காரில் முகமூடி அணிந்த நான்கு ஆண் சந்தேக நபர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவசரக் குழுவினரின் உதவியுடன் துப்பாக்கி சூட்டுக் காயங்களுக்கு உள்ளான தொழிலதிபர், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

அவர் தற்போது, தீவிரமான ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியாத நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய தற்போது பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதோடு, இதுதொடர்பான விசாரணையையும் துரிதப்படுத்தியுள்ளனர்.

பகிரவும்...