Main Menu

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் ஸ்டுவர்ட் பிரோட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் எட்டியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிரோட், மொத்தமாக 16 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், உலகளவில் ஏழாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

அவர் தற்போது 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 501 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முன்னதாக ஜேம்ஸ் எண்டர்சன் 129 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் ஜாம்பவான் முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அவுஸ்ரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் எண்டர்சன் 589 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் கிளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் கோட்னி வோல்ஷ் 519 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

பகிரவும்...