Main Menu

கனடாவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணை நாளை ஆரம்பம்!

கனடாவில் பொது ஊழியர்கள் மத அடையாளங்களுடனான உடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டம்-21 இற்கு எதிரான வழக்கு விசாரணை நாளை கியூபெக் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

குறித்த சட்டம், கனேடிய அரசியலமைப்பை மீறுகின்றது என உரிமைக் குழுக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் வழக்கு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தச் சட்டமானது ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பொது ஊழியர்கள் பணியின்போது மதச் சின்னங்களை அணிவதைத் தடைசெய்கிறது.

கனேடிய மாகாணமான கியூபெக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இதுகுறித்த வழக்கு இவ்வாரம் நடைபெறுகிறது.

குறித்த சட்டம்-21இற்கு எதிராக கனேடிய முஸ்லிம்களின் தேசிய சபை, கனேடிய சிவில் லிபேர்ட்டிஸ் அசோசியேஷன் ஆகியவற்றுடன் இக்ராக் நூரல் ஹக் என்ற முஸ்லிம் பெண்ணும் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 2019 ஜூனில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப், யூத ஆண்கள் அணியும் கிப்பாக்கள் மற்றும் சீக்கியர்கள் அணியும் தலைப்பாகைகள் உள்ளிட்ட மத அடையாள உடைகள் அணிவதைத் தடுக்கிறது.

இந்நிலையில், இந்தச் சட்டம் பாரபட்சமானது எனவும் கனடாவில் இரண்டாம் தரக் குடியுரிமை உருவாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு உரிமைக் குழுக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...