Main Menu

பா.ஜ.க அரசு விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதா – நாடாளுமன்றத்தில் ராகுல் கேள்வி!

விவசாயிகளின் கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீடிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பா.ஜ.க அரசு தொழிலதிபர்களை விட விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதாக எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாடு முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கேரளாவில் விவசாயிகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அங்கு தற்போது வரையில் 18 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

வயநாட்டில், கடனை திருப்பிச் செலுத்தாதமைக்காக  சுமார் 8 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையாக, விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை எடுக்கவுள்ளன.

இதனால் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை விவசாயிகள், எதிர்நோக்கியுள்ளனர். வரவுசெலவு திட்டத்தில்  விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

மாறாக பெரும் தொழிலதிபர்களுக்கு 4 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால்,  இந்த அரசு  பெரும் தொழிலதிபர்களை விட விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதா?

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வழங்கிய வாக்குறுதிகளை   நிறைவேற்ற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...