Main Menu

பாரிய கிளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது: சம்பிக்க எச்சரிக்கை

இனங்களுக்கிடையில் தற்போது நீடிக்கும் சந்தேக நிலைமையை தீர்க்காவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி செய்த கிளர்ச்சிபோன்றோ, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போராட்டங்கள் போன்றோ பூதகரமான விடயமாக இது மாறிவிடும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இந்த நாட்டில் இனரீதியாகவும் மதரீதியாகவும் வன்முறைகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவியது.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதிலும் இனங்களுக்கிடையில் சந்தேகங்கள் நிலவிவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு பகுதியை பொறுத்தவரைக்கும் நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கு தெரியாது.

ஆனால், சிங்கள பகுதிகளை பொறுத்தவரையில் முஸ்ஸிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் பொருட்கள் வாங்க செல்வது குறைவான நிலையிலேயே உள்ளது.

முஸ்லிம்களை பொறுத்தவரையில் பொது இடங்களில் கூடுவதற்கும் தமது கடமைகளை செய்வதற்கும் அச்ச நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

இந்த நிலைமை மாற்றப்படவேண்டும். எமக்குள் இருக்கும் அச்சநிலைமைகள் தூக்கியெறியப்படவேண்டும்.

இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.

இந்த பிரச்சினையை நாங்கள் சரியான முறையில் தீர்க்காவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி செய்த கிளர்ச்சிபோன்றோ, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போராட்டங்கள் போன்றோ இதுவும் பூதகரமான போராட்டங்களாக வெடிக்கும் நிலைமையேற்படும்.

ஆகவே இலங்கை அரசாங்கம், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், முஸ்லிம் மதத்தலைவர்களுக்கு இதற்கான பொறுப்பு இருக்கின்றது.

இன்று படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மீதும் இந்த ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் பாதுகாப்பில் தவறுகள் நடைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது. 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்தே இந்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளது.

அத்தோடு, 2013 மற்றும் 2014 காலப்பகுதியில் ஷ்கரான் குழுவினருக்கு எந்தவகையில் நிதிகள் கிடைத்தன என்பது தொடர்பிலும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு யார் நிதியுதவி வழங்கியது என்பதையும் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை முன்வைக்கிறோம்.

மதத்தினால், இனத்தினால் யாரையும் யாரும் தாக்குவதற்கோ, கொடுமைப்படுத்துவதற்கோ உரிமையில்லை.

இலங்கைதான் எமது தாய்நாடு என்று கருதவேண்டும். இலங்கையின் பொதுவான சட்டத்திற்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...