Main Menu

நிழல் தரப்போகும் விருட்சங்களுக்கு, நீர் பாய்ச்சும் மேகங்களாக இருப்போம்.. -சிவசக்தி ஆனந்தன்

நிழல் தரப்போகும் விருட்சங்களுக்கு நீர் பாய்ச்சும் மேகங்களாக இருப்போம்.. வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க.பாடசாலையின் தரம் ஒன்றுக்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வவுனியாவின் எல்லைக்கிராமங்களில் கள்ளிகுளம் கிராமமும் ஒன்றாகும். அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் பின் தங்கிய கிராமத்திலிருந்து இன்று இந்த மாணவர்கள் தமது பாலர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டு பலவித கனவுகளுடன் முதலாம் தரத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்கள். இவர்களை கருங்காலிக்குளம் பாடசாலை சமுகமும் நாமுமாக இன்முகத்துடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்த பாடசாலையில் பல்வேறு வளப்பற்றாக்குறைகள் இருப்பதை காண்கிறேன். அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மனமகிழ் கூடமாக இந்த பாடசாலை இருந்தால் தான் இந்த சின்னஞ்சிறு பிள்ளைகள் இன்னும் இன்னும் விருப்புடன் கற்றலில் ஈடுபட்டு மனவளம் பெறுவார்கள். மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை இந்த பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் எல்லோரதும் விருப்பமாகும். எனக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகை நிதியை இந்த பாடசாலையின் அபிவிருத்திக்காக தருவேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

அதேவேளை இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அண்மையில் தான் ஒரு ஏக்கர் வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. பெரும் காடாய் இருந்த காணிகளை சிரமங்களுக்கு மத்தியில் துப்பரவு செய்து தானியப்பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டிருந்தீர்கள்.

பருவமழை பொய்த்ததாலும், பருவம் தப்பி மழை பொழிந்ததாலும் அறுவடையின் பயனை நுகர முடியாமல் வறுமை, தொழில் இன்மை போன்ற பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகளை நீங்கள் சந்தித்திருப்பதையும் உணர்கிறேன்.

ஆனாலும் உங்களுடைய உழைப்பிலும், நம்பிக்கையிலும் தான் இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. இவர்கள் கற்றலில் இருந்து இடைவிலகி விடாமல் தொடர்ந்தும் கற்பதற்கு ஊக்கசக்தியாக இருப்போம். இன்றைக்கு நாம் அநுபவித்துக் கொண்டிருக்கும் துன்ப துயரங்களை நாளைக்கு இந்த பிள்ளைகள் அநுபவிக்கக் கூடாது எனும் விருப்பம் எங்கள் எல்லோருக்கும் உள்ளுர இருக்குமாயின் நிச்சயம் இந்த பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுப்போம். கல்வி தான் எங்கள் மூலதனம். இந்த ஒரேயொரு மூலதனத்தை நாம் இவர்களுக்கு கொடுத்துவிட்டால் போதும், நாளை இவர்கள் இந்த கிராமத்தை மட்டுமல்ல, இந்த மாவட்டத்தை, ஏன் எங்கள் தேசத்தையே கட்டியெழுப்பி விடுவார்கள் என்றார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரால் 20,000 ஆயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதேவேளை வவுனியா நொச்சிக்குளம் அ.த.க. பாடசாலையில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வில், போரினால் பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கு ரீ.ஆர்.ரீ தமிழ் ஒலி வானொலி நேயர்களின் அன்பளிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை காலணிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.

இவ்விரு நிகழ்வுகளிலும் வடமாகாணசபை உறுப்பினர் இந்திரராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரன்பாபு, திருமதி சிவசக்தி ஆனந்தன், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

827257

5643947 (1)

4788076

5667120

496153

4147443

2869304

5392052

5320657

75690

7534400

1209748

2171064

9491263 (1)

 

பகிரவும்...