Main Menu

தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இராணுவம் என்ற ரீதியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப எம்மால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்ளத்தான் நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். இதற்கான செயற்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்.

ஊரடங்குச் சட்டம் தற்போது ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைவாக தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்கு கொண்டுவரும் நோக்கில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

உலகின் ஏனைய நாடுகளை பார்க்க, இலங்கையில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும், இந்த நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டு செயற்படுவது எம் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட பொறுப்பாகவே கருதப்படுகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அனைவரும் வெளியில் நடமாட வேண்டும் என்ற அர்த்தமில்லை.  நாம் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டால்தான், நாமும் நமது சமூகமும் எதிர்க்கால ஆபத்திலிருந்து விடுபட முடியும்.

இராணுவம் என்ற ரீதியில் நாம் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.” என கூறினார்.

பகிரவும்...