Main Menu

திலீபனின் நினைவு நாளில் வவுனியாவிலிருந்து நடைப்பயணம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைப்பயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைப்பயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவப் படத்திற்குக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்  செ,கயேந்திரன், மற்றும் சட்டதரணி சுகாஸ்,  உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்  செ.மயூரன், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து‌ கொண்டிருந்தனர்.

இதேவேளை நடைப்பயணம் வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியை தாண்டி பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தைத் தடுத்த பொலிஸார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது. ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது. அதன்பின்னர் புதிய பஸ் நிலையம் வரைக்கும்  ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைப்பயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...