Main Menu

தமிழர்களின் 70வருட அரசியலை கைவிட்ட சம்பந்தன், சுமந்திரனின் செயற்பாட்டை ஒவ்வொரு குடிமகனும் துல்லியமாக அறியவேண்டும்! – பரந்தாமன் திருச்சிற்றம்பலம்

இலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு வழங்கியுள்ள பின்னிணைப்பு, தமிழ் தேசிய அரசியலின் ஒர் எழுத்து மூல வரலாற்று ஆவணம் என்றே நான் சொல்லுவேன்.

குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான தமது 9 நிலைப்பாடுகளை அந்த ஆவணத்தில் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்:

(1) மாநிலங்களின் ஒன்றியமாக, சமஸ்டி அரசொன்றாகவே இலங்கை இருக்க வேண்டும் என்றும்;

(2) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரே மாநிலமாக அமைய வேண்டும் என்றும்;

(3) இலங்கை ஒரு மத சார்பற்ற அரசாகவே இருக்க வேண்டும் என்றும்;

(4) தமக்கான நிதியைத் தாமே தேடிக்கொள்ளும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும்:

(5) மாநிலத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக்கூடாது என்றும்;

மேலும் 3 விடயங்களையும் தமது நிலைப்பாடாக கெளரவ சம்பந்தன் மற்றும் கெளரவ சுமந்திரன் ஆகியோர் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

அதாவது — குறித்த இடைக்கால அறிக்கையின் மூலக் கோட்பாட்டில் எந்த எந்த விடயங்களோடு தமிழர்கள் இணங்க மாட்டார்களோ, அந்த அந்த விடயங்கள் உட்பட, 8 விடயங்களுக்கான தமது மாற்று நிலைப்பாடாக இந்தப் பிரகடனங்களை அவர்கள் செய்துள்ளனர்.

இவ்வாறு பிரகடனப்படுத்திய அவர்கள் — அதன் பின்னர், 9ஆவதாக, ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அவர்கள் எடுத்துள்ள அந்த கடைசி – 9ஆம் இலக்க – நிலைப்பாடு, கடந்த 70 ஆண்டு கால தமிழ் தேசிய அரசியலில், தமிழர்களின் அதிகாரபூர்வப் பிரதிநிதிகளால், பகிரங்கமாக, வழங்கப்பட்டுள்ள அதிமுக்கியத்துவம் மிக்க ஒரு வரலாற்று ஒப்புதல் ஆகும்.

இடைக்கால அறிக்கையின் மூலக் கோட்பாடுகளுக்குப் பதிலாகத் தாம் இவ்வாறான 8 நிலைப்பாடுகளையும் கொண்டுள்ள போதிலும், இடைக்கால அறிக்கையின் அந்த மூலக் கோட்பாடுகளோடு இரண்டு பெரிய கட்சிகளும் (சிறீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி) உடன்பட்டு வருவார்களானால், மேற்கூறப்பட்டுள்ள தமது 8 நிலைப்பாடுகளையும் தாம் கைவிட்டுவிட்டு, இடைக்கால அறிக்கையின் (தமிழர்கள் இணங்கிப் போக முடியாத அந்த ) மூலக் கோட்பட்டோடு தாமும் இணங்கிப்போவதைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாக….

கெளரவ சம்பந்தன் மற்றும் கெளரவ சுமந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு, தமிழ் தேசிய (இனம்) கூட்டமைப்பு சார்பில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த ஒப்புதலின் ஆழமான அரசியற் பரிமாணத்தை தமிழ் தேசிய இனத்தின் ஒவ்வொரு குடிமகனும் அதன் துல்லியமான அரசியல் அர்த்தத்தோடு புரிந்துகொள்ளவேண்டும்.

பகிரவும்...