Main Menu

தனியார் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்தமை தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாடு – சபாநாயகர்

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான தனியார் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய தொழில்நுட்பம் நாட்டிற்கு நல்லது என்றாலும், இதனை தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக வெளியிடப்படுவதால் சமூகத்தில் ஒழுக்க சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளினால் குடும்பங்களுக்குள் பிரிவு ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இவ்வாறான தொழில்நுட்பங்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் பொலிஸ் அதிகரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் , நடிகைகள் மற்றும் பலர் சம்பந்தப்பட்ட தனியார் தொலைபேசி உரையாடல்களின் பல பதிவுகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இந்த பதிவுகள் ரஞ்சன் ராமநாயக்கவினால் இறுவெட்டுக்களில் சேமிக்கப்பட்டிருந்தன, ஆனால் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் இவை ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...