Main Menu

ஜம்மு – காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம் : 144 தடை உத்தரவு அறிவிப்பு!

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக ஸ்ரீநகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் இரத்து செய்யப்பட்டன.

மேலும் ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்வதற்காக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுடன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அவசரமாக ஆலோசனை கூட்மொன்றை நடத்தியிருந்தனர்.

இந்த கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காஷ்மீரில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அங்கு சுமார் 40 ஆயிரம் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...