Main Menu

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பின்வரிசை உறுப்பினர் களும் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அந்த விடயத்தில் இறுதித் தீர்மானத்தை இன்னமும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளராக தான் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளதாக தெரிகின்றது.

 ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் வரும் வரையில் வேட்பாளரை அறிவிக்காதிருப்பதற்கும் அதற்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுக்கூட்டணியை அமைப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சிலரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெ ள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பொறுமை காக்குமாறும் அவர் கோரியுள்ளார். 

செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளமையினால் இந்த விடயத்தில் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கடந்த சனிக்கிழமை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். 

இந் நிலையில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படாத நிலையில் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது.

பகிரவும்...