Main Menu

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேர் பத்திரமாக மீட்பு: தொடர்ந்தும் மீட்பு பணிகள் தீவிரம்!

தென்மேற்கு சீனாவின் சண்முஷு நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த 13பேரை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்தினுள் உள்ள இரும்பு கம்பியை வீரர்கள் பலமாக தட்டினர். இதையடுத்து அப்பகுதியின் மறுமுனையில் இருந்தும் கம்பிகளை தட்டும் சத்தம் கேட்டு, பதில்கள் வரவும் மீட்புப்படை வீரர்கள் சென்று அங்கிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.

வெள்ள நீர் உட்புகுந்து விபத்து ஏற்பட்ட காரணத்தினால் மின்சாரம் தகவல் தொடர்பு சாதனங்கள், காற்றோட்டம் போன்ற அனைத்து அமைப்புகளும் சேதமடைந்திருந்தன.

விபத்து ஏற்பட்ட இடத்திற்கும், சுரங்க நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட தொலைவு சுமார் 10 கி.மீ ஆகும். தண்ணீரும் இடுப்பளவு இருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு மீட்புப்பணி உபகரணங்களுடன் நடந்து சென்று குறித்த 13பேரையும் மீட்புக் குழுவினர் காப்பாற்றினர்.

கோங்சியன் கவுண்டியில் உள்ள சிச்சுவான் நிலக்கரி தொழில்துறை குழுமத்திற்கு சொந்தமான சண்முஷு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென வெள்ளநீர் புகுந்தால், ஐந்து பேர் உயிரிழந்ததோடு, 30 சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கிகொண்டனர்.

இந்த நிலையில், சுரங்கத்தினுள் சிக்கியவர்களை மீட்கும் பணியில், 13 மீட்புக் குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 251 வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கியவர்களில் 13 ஊழியர்களை 80 மணி நேரம் தேடலுக்கு பின்பு மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

மேலும், சுரங்கத்தினுள் சிக்கியுள்ள எஞ்சிய நபர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு வெள்ளம் ஏற்பட்ட போது, நிலக்கரி சுரங்கத்தில் 347 சுரங்கத் தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக கூறப்படுகின்றது.

பகிரவும்...